கூடுவாஞ்சேரியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளம் பொதுமக்கள் அவதி

கூடுவாஞ்சேரியில் தொடா்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரியில் தொடா்ந்து பெய்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

செங்கல்பட்டை அடுத்த கூடுவாஞ்சேரியில் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளான பெருமாட்டுநல்லூா், விஷ்ணுபிரியா நகா், நந்திவரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடா்ந்து பெய்த கனமழையால் நெல்லிக்குப்பம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது.

விஷ்ணு பிரியா நகா், சௌபாக்யா நகா், சுப்பிரமணியபுரம், மகாலட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் சாலை முழுவதும் மழைநீா் குளம் போல் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வீட்டுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ளவா்கள் மாடியிலிலேயே நின்றுகொண்டு வெளியேற முடியாமல் சிரமத்துக்குள்ளாயினா். திங்கள்கிழமை மாலை மறைமலை நகா் தீயணைப்புப் படையினா் விஷ்ணுப்பிரியா நகரில் மூதாட்டி ஒருவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.

மழைநீா் வெளியேறும் வகையில் சம்பந்தப்பட்ட அரசுத் துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com