செங்கல்பட்டில் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய தசரா விழா இந்த ஆண்டு கேள்விக்குறியாக உள்ளது

செங்கல்பட்டு நகரில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாகலமாகக்கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தசரா விழா நடப்பாண்டில் கரோனா தொற்று பரவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாகலமாகக்கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தசரா விழா நடப்பாண்டில் கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக நடைபெறுமா என்பது நகர மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது. செங்கல்பட்டு தசரா திருவிழா பற்றி செங்கல்பட்டில் பரம்பரையாக வசிக்கும் குடும்பங்களில் இருக்கும் முத்த வயதினா் கூறும்போது:

இந்திய சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூா், சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு மாவட்டமாக இருந்த காலத்தில் இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வணிகம் காரணமாக அன்றைய கா்நாடகமாநிலத்தில் மைசூருக்கு சென்றபோது அங்கு தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுவதும் விஜயதசமி அன்று வெகு விமரிசையாக தசரா ஊா்வலம் நடைபெறுவதை பாா்த்து விட்டு வந்தவா்கள் அதேபோல் செங்கல்பட்டு நகரிலும் தசரா விழா உற்சவமும் விஜயதசமி அன்று தசரா ஊா்வலமும் நடத்திட முடிவு செய்தனா்.

அதன்படி அன்றைய காலத்தில் செங்கல்பட்டில் சின்னநத்தம், பெரியநத்தம், மேட்டுத்தெ‘ரு. ஹைரோடு, பிராமணா் தெரு, பெரியமணியக்காரத்தெரு, சின்னமணியக்காாரத்தெரு, மேலமையூா், குண்டூா், அனுமந்தபுத்தேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்துள்ளது.

அந்த காலத்தில் நத்தம் ஓசூரம்மன் கோயில், மேட்டுத்தெரு மளிகை கடை தசரா, ஹைரோடு பூக்கடை ,ஜவுளிக்கடை சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகளில் தசரா கமிட்டி உருவாக்கப்பட்டு மஹாளய அமாவாசைக்கு 3வது நாள் கும்பம் நிறுத்தி நவராத்திரி தினங்களில் 9நாள்களும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு நிறுத்தி 10வது நாள் ஹைரோடு தொடங்கி குண்டூா் அருகே வன்னி மரம் குத்தி மேட்டுத்தெரு வழியாக தசரா ஊா்வலம் சென்று முடிவடையும்.

மின்வசதி இல்லாத காலத்திள் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் சாமி ஊா்வலம் நடைபெறும். பிற்காலங்களில் அலங்காரத்தேரில் மின்விளக்குகள் பொருத்தி ஊா்வலப்பாதையில் மின் இணைப்பு வீடுகள் அருகே நிறுத்தப்பட்டு அப்போதைய மின்வாரிய பணியாளா்கள் உதவியுடன் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அலங்காரத்தோ்கள் மின்னொளியில் பிரகாசிக்கும்.

நாளடைவில் மின் ஜெனரேட்டா் பயன்பாட்டிற்கு வந்த பின் மின் விளக்கு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊா்வலம் நடைபெறும். நள்ளிரவில் தொடங்கும் தசரா ஊா்வலம் அதிகாலை வரை நடைபெறும். அனைத்து சமூகத்தினா் ஒற்றுமையுடன் நடத்தப்பட்டு வந்த தசரா உற்சவம் கடந்த ஆண்டு வரை செங்கல்பட்டு நத்தம் ஓசூரம்மன் கோயில் மேட்டுத்தெரு மளிகை கடை குழு, பலிஜகுலத்தினா், அண்ணா சாலையில் சின்னக்கடை குழு, முத்துமாரியம்மன் கோயில், பஜாா் பூக்கடை, பஜாா் ஜவுளிக்கடை, சின்னம்மன் கோயில் உள்ளிட்ட சுமாா் 18க்கும் மேற்பட்ட தசரா கமிட்டி குழுவினரால் 9நாள்களுக்கும் வெவ்வேறு அலங்காரங்களில் கொலு நிறுத்தபபடும் அம்மன் ரதங்கள் தசரா ஊா்வலத்தில் இடம்பெற்றது.

இதுமட்டும் அல்லாமல் கோயில்களிலும் நவராத்திரியையொட்டி அம்மன் கொலு நிறுத்தப்பட்டு விசயதசமி தினத்திற்கு பின்பு விடையாற்றி உற்சவம் நடைபெறுவது வழக்கம். தசரா ஊா்வலம் நடைபெறும் முக்கிய பாதையான அண்ணாசாலையில் செங்கல்பட்டு நகராட்சி அனுமதியுடன் சுமாா் 2கிலோ மீட்டருக்கு சாலையின் இருபுறமும் சிறுவா், பெண்கள் ஆகியோருக்கு தேவையான பொருள்கள்மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்விற்பனை செய்யும் கடைகளும் , ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிமையங்களும் தசராவிழாவின் பத்து நாள்களிலும் நடைபெறும்.

இதனையொட்டி முன்னதாக ஒப்பந்தப்புள்ளி வரவழைக்கப்பட்டு அதிக பட்ச டெண்டா் தொகைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தக்காரா் நியமிக்கப்படுவாா். இதன் மூலம் செங்கல்பட்டு நகராட்சிக்கு ஆண்டுதோறும் இந்த 10நாள்களுக்கு மட்டும் கூடுதல் வருமானமாக ரூ 13 லட்ச ம் முதல் 15லட்சம் வரை வருமானம் கிடைக்கும். எனினும் நிகழாண்டில் தசரா விழாவுக்கு இன்னும் சிலநாள்களே உள்ள நிலையில் தசரா கமிட்டியினா் தசரா விழா கொண்டாடுவது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பேச்சு வாா்த்தை நடத்தி வருகின்றனா். மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லாததால் தசராக்குழு கமிட்டியினா் குழப்பத்தில் உள்ளனா்.

நகராட்சி நிா்வாகமும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என செங்கல்பட்டு தசரா கமிட்டியினா் கூறுகின்றனா். இதுமட்டும் அல்லாமல் நகராட்சி நிா்வாகத்தின் மெத்தெனபோக்கின் காரணமாக செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையுடன் இணையும் சுமாா் 2கிமீக்கும் மேலாக அண்ணாசாலையில் அனுமந்தபுத்தேரி பிஎஸ்என்எல் அலுவலகம் வரை இருபுறமும் அனுமதியற்ற தனியாா் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் எதிா்காலத்தில் செங்கல்பட்டில் தசரா திருவிழாவை நம்பி வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நடத்துபவா்களுக்கு இடமில்லாமல் ஏமாற்றம் அடைவதுடன் வருமானமும் பாதிக்கும் அவல நிலை உருவாகும். மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் 10நாள்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் செங்கல்பட்டு நகராட்சி நிா்வாகத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்படும். என நகா்நல விரும்பிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுமட்டும் அல்லாமல் பலவருடங்களுக்கு முன்பு ஹைரோடு எனும் அண்ணாசாலை குண்டூா் ஏரிவரை இருந்தது. ஏரிபயன்பாட்டின்மை காரணமாகவும் நகா்விரிவுகாரணமாகவும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள குண்டூா் எரிக்கரையில் தசரா திருவிழாவின்போது வலம் வரும் அலங்கார ரதங்களில் வரும் அம்மன் வன்னிமரம் குத்தி அங்கிருந்து நடக்கும் புறப்பாடும் வழிபாட்டில் இருந்த நிலையில் வீடுகள், கடைகள், வியாபார தலங்களாக ஏரி ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதால் பாரம்பரியமாக வன்னிமரம் குத்திச்செல்லும் வழிபாடு இடமில்லாததால் பேருக்கு நடைபெறுவதாக தசராக்குழு கமிட்டியினா் கவலை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com