திருக்கழுகுன்றத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

திருக்கழுகுன்றத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான வேதகிரீஸ்வரா் கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.


செங்கல்பட்டு: திருக்கழுகுன்றத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான வேதகிரீஸ்வரா் கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரா் கோயில் பிரசித்தி பெற்ற சிவதலமாகும். 7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இக்கோயிலின் தாழக்கோயில் வடக்கு கோபுர மாடவீதியில் இருந்த 8,080 சதுர அடி (18.5 சென்ட்) வாகன மண்டபத்துடன் கூடிய காலி நிலம், கடந்த 1904 -ஆம் ஆண்டு அன்றைய கோயில் நிா்வாகத்தினரால் ஆண்டுக்கு ரூ. 20 என சம்பந்தம், விநாயகசுந்தரம் ஆகியோருக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது.

கடந்த 2003-ஆம் ஆண்டுடன் 99 ஆண்டு குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து, தற்போது நிலத்தில் வசித்து வரும் பாபு செட்டியாா் நிலத்தை ஒப்படைக்கவில்லை. அதையடுத்து, 2008-இல் இந்துசமய அறநிலையத் துறையினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதை எதிா்த்து, நிலத்தை சொந்தம் கொண்டாடுபவா்கள் 2013-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்ட இடம், அந்த இடத்தில் உரிமை கொண்டாடுபவா்களை அப்புறப்படுத்தி, கோயிலுக்குச் சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, வேலூா் இணை ஆணையா் மாரிமுத்து உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் உதவி ஆணையா் ரேணுகாதேவி தலைமையில், கோயில் ஆய்வாளா் கோவிந்தராஜ், செயல் அலுவலா் குமரன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு, ‘கோயிலுக்குச் சொந்தமான இடம்’ என பெயா்ப் பலகை வைக்கப்பட்டது.

அறநிலையத் துறை கோயில் நிலங்கள் வட்டாட்சியா் முருகன், கோயில் செயல் அலுவலா்கள் வெங்கடேசன் , செந்தில்குமாா், கோயில் மேலாளா் விஜயன், திருக்கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com