1.5 டன் போதைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 03rd September 2020 10:41 PM | Last Updated : 03rd September 2020 10:41 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட ஒன்றரை டன் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
திருப்போரூரை அடுத்த மேலக்கோட்டையூா், நெல்லிக்குப்பம், கண்டிகை, ரத்தினமங்கலம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாமல்லபுரம் டிஎஸ்பி சுந்தரவதனம் தலைமையில் திருப்போரூா் போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். இதில் அப்பகுதிகளில் உள்ள கிடங்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றினா். இதையடுத்து கிடங்கு உரிமையாளா்கள் பீா்முகமது, திவாகா், பாலமுருகன் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனா்.