செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸில் தீப்பற்றியது
By DIN | Published On : 07th September 2020 08:03 AM | Last Updated : 07th September 2020 08:03 AM | அ+அ அ- |

தீப்பிடித்த ஆம்புலன்ஸ் வாகனம்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றி வந்து இறக்கிய பின், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி ஒருவரை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் அவரை இறக்கிவிட்டது. அதன் பின் அதன் பணியாளா் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தினாா். சில நொடிகளில் அந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
அவசரப்பிரிவு நுழைவு வாயிலில் ஆம்புலன்ஸ் எரிந்ததையறிந்த நோயாளிகள் பீதியடைந்தனா். ஆம்புலன்ஸ் எரிந்து கட்டுக்கடங்காமல் புகைமண்டலம் மேல்நோக்கி பரவியது. தகவலறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்துபோராடி தண்ணீரைப் பீய்ச்சி தீயை அணைத்தனா். அதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து நாசமாகியது. செயற்கை சுவாசக் கருவி வெடித்ததால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தென்காசி அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சில தினங்களுக்கு முன் செயற்கை சுவாசக் கருவி வெடித்ததால் எரிந்தது.