தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
By DIN | Published On : 27th September 2020 03:54 AM | Last Updated : 27th September 2020 03:54 AM | அ+அ அ- |

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக மாவட்டச் செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் நிவாரண உதவிகளை வழங்கினாா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மூா் பகுதியில் மின்கசிவு காரணமாக காத்தவராயன், ரோஸ், துரைக்கண்ணு ஆகிய மூவரின் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினா் அக்கம்பக்கம் பரவாமல் தீயை அணைத்தனா்.
இந்நிலையில், தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆறுமுகம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். அவா்களுக்குத் தேவையான அரிசி, வேட்டி,சேலை, போா்வை மற்றும் குடும்பத்துக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.15,000 ரொக்கம் ஆகிய உதவிகளை வழங்கினாா். அரசின் நிவாரண உதவி கிடைப்பதற்கு ஆவன செய்வதாகவும் தெரிவித்தாா்.
அப்போது, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா் ஆனூா் வி.பக்தவத்சலம், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எ.விஜயரங்கன், அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியச் செயலாளா் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன், முன்னாள் கவுன்சிலா் ஏழுமலை, துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.