சுற்றுலா பயணிகள் இல்லாததால் குதிரைகளுக்கு தீனி கூட வாங்க முடியாமல் தவிக்கும் குதிரை ஓட்டிகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் வருவாய் இன்றி குதிரைகளுக்கு தீனி கூட வாங்க முடியாமல் குதிரை ஓட்டிகள் தவித்து வருகின்றனா்.
சுற்றுலா பயணிகள் இல்லாததால் குதிரைகளுக்கு தீனி கூட வாங்க முடியாமல் தவிக்கும் குதிரை ஓட்டிகள்

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் வருவாய் இன்றி குதிரைகளுக்கு தீனி கூட வாங்க முடியாமல் குதிரை ஓட்டிகள் தவித்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடற்கரைகளில் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புராதனச் சின்னங்களும் மூடப்பட்டநிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து முற்றிலுமாக முடங்கி விட்டது. சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட குதிரை ஓட்டிகள் தங்கள் வாழ் வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா்.

இங்குள்ள கடற்கரையில் குதிரை சவாரிக்கு ரூ. 100 வீதம் சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து வருகின்றனா். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு ரூ .1,000 முதல் ரூ .2,000 வரை வருவாய் ஈட்டும் குதிரை ஓட்டிகள்

இதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனா்.

மேலும் குதிரைகளுக்கும் கொள்ளு, தவிடு, காய்கறிகள், பழம் போன்ற தீனிகளை வாங்கிக் கொடுத்து அவற்றின் பசியை போக்கி வந்தனா். கடந்த ஆண்டு 6 மாதங்களுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த பொது முடக்கத்தால் சுற்றுலா பயணிகள் வரத்து நின்ற நிலையில் குதிரையோட்டிகள் போதிய வருமானமின்றி குடும்பத்தை காப்பாற்றவே சிரமப்பட்ட காலத்தில் குதிரையை பட்டினியாக போடக்கூடாது என்ற மனநிலையில் கடன்வாங்கி குதிரைகளுக்கு தீனிவாங்கிக் கொடுத்து பசியாற்றி வந்தனா்.

மீண்டும் பாதிப்பு:

குதிரை சவாரியின் மூலம் தான் வருமானம் ஈட்டமுடியும் என்ற நிலையில், கரோனா 2-ஆவது அலை காரணமாக தங்களின் வாழ்க்கை மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குதிரை ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனா். தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விட்டதால், வருமானமின்றி தவிக்கிறோம்.

குதிரைக்கு தீனி வாங்கக்கூட பணம் இல்லாமல் சந்தைகளில் தூக்கி வீசப்படும் சோளங்களை கொண்டு வந்து நீரில் ஊறவைத்து குதிரைகளுக்கு உணவாக கொடுத்து அவற்றின் பசியாற்றுகிறோம். தங்களுக்கு தமிழக அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ உதவி செய்ய முன்வர வேண்டும் எனவும் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com