செங்கல்பட்டில் இரு போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிப்பு: பெண் உள்பட 3 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டத்தில் சதுரங்கப்பட்டிணம் அருகே அணுப்பபுரத்திலும் மற்றும் பூந்தண்டலத்திலும் போலி மதுபான ஆலைகள் செயல்பட்டு வந்த கண்டுபிடிக்கப்பட்டது. 
போலி மதுபான ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்கள், மதுபாட்டில்கள்.
போலி மதுபான ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்கள், மதுபாட்டில்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சதுரங்கப்பட்டிணம் அருகே அணுப்பபுரத்திலும் மற்றும் பூந்தண்டலத்திலும் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலைகள் இரண்டு சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுப்பிரிவு காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன் அங்கிருந்த ஏராளமான போலி மதுபாட்டில்கள், இயந்திரங்கள், ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் ஒரு பெண் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மதுவிலக்குப்பிரிவு அமலாக்கப்பிரிவில் செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வுப் பிரிவு நுண்ணறிவுப்பிரிவினருக்கு  செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி மதுபான ஆலைகள் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டிணம் அணுப்பபுரம் வெள்ளாளர் தெருவில் செயல்பட்டு வந்த  மதுபான ஆலையை போலீஸார் சோதனையிட்டனர். 

அச்சோதனையில் எரிசாராயம் 100 லிட்டர், நான்கு  சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலியாக மதுபானம் தயாரிப்பதற்கு தேவையான பாக்கெட் சீலிங் மெஷின்-4, போலி லேபிள்கள் 4000, போலி ஹாலோகிராம்கள் 3298 உட்பட மொத்தம் 5 வகையான பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக மணிகண்டன் மற்றும் ஜெயலெட்சுமி என்ற இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மற்றொரு மதுபான ஆலை கண்டு பிடிப்பு: அணுப்பபுரத்தில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் கொடுத்த வாக்குமூலத்தின்படி செங்கல்பட்டு மாவட்டம் பூந்தண்டலம் என்ற இடத்திலும் செயல்பட்டு வந்த போலி மதுபான ஆலையையும் போலீஸார் சோதனையிட்டனர். இச்சோதனையில் 560 லிட்டர் எரிசாராயம், ஆல்கஹால் மீட்டர்-1, போலி வில்லைகள்-1000, போலி ஹாலோகிராம்கள்-1000,கார்க்கிங் மெஷின்-1, போலி கப்புகள் 10 கிராம், புளூ பேரல்கள் -3, லேபிள்கள் ஒட்டப்பட்ட 180 மில்லி அளவுள்ள 1496  போலி மதுபாட்டில்கள், வெள்ளை நிற காலி கேன்கள்-5 உட்பட ஏராளமான பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் என்பவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி மதுபான ஆலைகளை கண்டறிந்து பொருட்களை கைப்பற்றியமைக்காக மத்திய புலனாய்வு நுண்ணறிவுப் பிரிவினரை கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள் செல்போன் எண்-94984 10581 என்ற  எண்ணுக்கும், கட்டணமில்லா சேவை எண் 10581க்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com