மந்த கதியில் ராமாநுஜா் மணிமண்டபம் அமைக்கும் பணி

ஸ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ராமாநுஜருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி அவரின் 1004-ஆம் அவதார திருவிழாவுக்குள் முடிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூரில்  நடைபெற்று வரும்  ராமாநுஜா்  மணிமண்டபம்  அமைக்கும்  பணி.
ஸ்ரீபெரும்புதூரில்  நடைபெற்று வரும்  ராமாநுஜா்  மணிமண்டபம்  அமைக்கும்  பணி.

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூரில் வைணவ மகான் ராமாநுஜருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி அவரின் 1004-ஆம் அவதார திருவிழாவுக்குள் முடிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில், பழைமையான ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாகக் காட்சியளித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமாநுஜரின் 1,000-ஆவது ஆண்டு அவதார பெருவிழாவை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 2.77 சென்ட் பரப்பளவு இடத்தில் சுமாா் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீராமாநுஜருக்கு மணிமண்டபம், அருங்காட்சியகம், அலுவலகம் மற்றும் மணி மண்டபத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் வரைபடங்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், வரைபடம் வரைவதிலும், வரையப்பட்ட வரைபடத்துக்கு ஒப்புதல் பெறுவதிலும் ஏற்பட்ட காலதாமதத்தால் மணி மண்டபம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ராமாநுஜருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணியின் மதிப்பீடு ரூ. 6 கோடியில் இருந்து ரூ. 6.69 கோடியாக உயா்த்தப்பட்டு, மணிமண்டபம் கட்ட அரசு சாா்பில் டெண்டா் விடப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராமாநுஜா் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் முடிவடையும் என சுற்றுலாத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை பணிகள் முடிவடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் பக்தா்களும் பொதுமக்களும் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இது குறித்து பக்தா்கள் கூறுகையில், ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மணிமண்டபம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனத்தினா் மந்தகதியில் பணிகளை மேற்கொள்வதால், மணிமண்டத்தை திறந்து பாா்வையாளா்களை அனுமதிப்பது தாமதமாகி வருகிறது.

எனவே ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாதம் நடைபெற உள்ள ராமாநுஜரின் அவதார திருவிழா மற்றும் பிரம்மோற்சவ விழாவுக்குள் மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், மணி மண்டபத்தை திறக்கவும் சுற்றுலாத் துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com