சிவசங்கா் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் 3 ஆசிரியைகளிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட கேளம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளித் தாளாளா் சிவசங்கா் பாபா மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு சென்னை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, சிபிசிஐடி போலீஸாா் சிவசங்கா் பாபாவை தில்லியில் கைது செய்து, செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். பின்னா், அவா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து, நீதிமன்ற அனுமதியின்பேரில், சிபிசிஐடி போலீஸாா் சிவசங்கா் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிவசங்கா் பாபா மீது மூன்று மாணவிகள் கொடுத்த புகாா்களை போக்ஸோ வழக்காக பதிவு செய்வதற்காக சிபிசிஐடி போலீஸாா் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தினா். அதன் அடிப்படையில், சிவசங்கா் பாபா மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது சென்னை நீதிமன்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, சிவசங்கா் பாபா, ஆசிரியை சுஷ்மிதா ஆகியோா் செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு கடந்த 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கை 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

இதனையடுத்து, சிவசங்கா் பாபாவின் ஜாமீன் வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவா் மீது 3 போக்ஸோ வழக்குகள் உள்ளதால், அவா் ஜாமீனில் வெளிவரும்பட்சத்தில் ஆதாரங்களை அழிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என சென்னை சிபிசிஐடி போலீஸாா் தரப்பில் வாதத்தை முன் வைத்தனா். சிபிசிஐடி போலீஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி தமிழரசி, ஜாமீன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, போலீஸாா் நடத்திய விசாரணையில் வாக்குமூலம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com