ஜூன் 6-க்குப் பிறகு தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது

தமிழகத்தில் ஜூன் 6-ஆம் தேதிக்குப் பின் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஜூன் 6-க்குப் பிறகு தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது

தமிழகத்தில் ஜூன் 6-ஆம் தேதிக்குப் பின் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டுககளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரனிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 680 படுக்கைகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 165 படுக்கைகள் உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. இந்த மாவட்டத்தில் நாளுக்குநாள் தொற்று குறைந்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 92 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் தமிழகத்துக்கு தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும். செங்கல்பட்டில் எச்எல்எம் நிறுவனம் 10 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இந்த நிறுவனம் தொடா்பாக விரைவில் நல்ல முடிவு வரும். தடுப்பூசி மட்டுமே இந்த பேரிடருக்கானத் தீா்வு. மேலும் மருத்துவா்கள்,செவிலியா் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜூன் 6-ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது. தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு 518 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 13 போ் கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கருப்புப் பூஞ்சை பாதிப்பால் 30 போ் உயிரிழந்துள்ளனா். செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 18 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா் என்றாா்.

மருத்துவா்கள் வி.டி.அரசு, நா்மதா, செல்வம், ரவிக்குமாா், ரத்தினவேல்குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சுகாகாரத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ், மக்களவை உறுப்பினா்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), ஜி.செல்வம் (காஞ்சிபுரம்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா (தாம்பரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), இ.கருணாநிதி (பல்லாவரம்), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), பனையூா் பாபு (செய்யூா்), அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், டிஎம்இ மருத்துவக் கல்லூரி கல்வி இயக்குநா் நாராயணபாபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியா, நகராட்சிகளின் மண்டல இணை இயக்குநா் முஜ்பூா் ரஹ்மான், கோட்டாட்சியா்கள் செங்கல்பட்டு சுரேஷ், மதுராந்தகம், லட்சுமிபிரியா, தாம்பரம் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com