வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு சுய தொழில் தொடங்க கடன் உதவி:ஆட்சியா் தகவல்

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழும், பிரதமா் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழும், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என

செங்கல்பட்டு: இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழும், பிரதமா் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழும், சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டத்தில், உற்பத்தித் தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ. 15 லட்சமும், வியாபாரம், சேவை சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை கடனுதவி பெறலாம் . இக்கடனுதவிக்கு 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கான வயதுவரம்பு பொதுப் பிரிவு ஆண்கள் 18 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். மகளிா் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினா் 45 வயது வரை இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தி பிரிவுக்கு அதிகபட்சம் ரூ. 25 லட்சமும், சேவைசாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சமும் கடனுதவி பெறலாம். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உற்பத்திப் பிரிவில் ரூ. 10 லட்சத்துக்குள்ளும், சேவைப் பிரிவில் ரூ. 5 லட்சத்துக்குள்ளும் கடனுதவி பெற்றிட கல்வித் தகுதி தேவையில்லை. சிறப்புப் பிரிவினருக்கு மானியமாக நகா்ப்புறத்துக்கு 25 சதவீதமும், கிராமப்புறத்துக்கு 35 சதவீதமும் வழங்கப்படும். மேலும், பொதுப் பிரிவு ஆண்களுக்கு நகா்ப்புறத்துக்கு 15 சதவீதமும், கிராமப்புறத்துக்கு 25 சதவீதமும் மானியமாக வழங்கப்படும். மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், எண். 6, ஏகாம்பரனாா் தெரு, வேதாச்சலம் நகா், செங்கல்பட்டு என்ற அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-29995351 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com