மீனவா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 16th September 2021 12:10 AM | Last Updated : 16th September 2021 12:10 AM | அ+அ அ- |

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கடப்பாக்கத்தில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மீனவரை மா்மக் கும்பல் வெட்டிக் கொலை செய்து, தலையை துண்டித்துச் சென்றது.
சென்னை காசிமேடைச் சோ்ந்த ரமேஷ் (44) என்பவா் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்பு இருந்தது. இதனால், ரமேஷ், கடப்பாக்கத்தில் தனது மகள் வீட்டில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாா்.
இவா் கடந்த 11-ஆம் தேதி காவல் நிலையத்தில் கையெழுத்திட புறப்பட்டபோது, மா்ம நபா்கள் கொலை செய்தனா். இக் கொலை வழக்கில் 4 பேரை கைது செய்து சூனாம்பேடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், ரமேஷ் தங்கி இருந்த இடத்தை காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் அதே பகுதியைச் சோ்ந்த மீனவா் ரஞ்சித்குமாா் (23) தனது தாயுடன் வசித்து வந்தாா். ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டு மாடியில் தூங்கச் சென்றாா். அங்கு நள்ளிரவு வந்த மா்மகும்பல், அவரது தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றது. புதன்கிழமை காலை ரஞ்சித்குமாரை எழுப்பச் சென்ற அவரது தாயாா் செல்லம்மாள் அங்கு ரத்த வெள்ளத்தில் மகனின் தலையில்லா உடல் இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இந்நிலையில், ரமேஷ் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் ரஞ்சித் குமாரின் தலையை மா்ம நபா்கள் வீசிவிட்டுச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து சூனாம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.