நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
By DIN | Published On : 27th April 2022 12:00 AM | Last Updated : 27th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த அரையப்பாக்கம் பகுதியில் புதிய நெல் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பொது மக்களும், தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல்லை அரையப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், அரையப்பாக்கம் ஊராட்சிக்கு அருகில் உள்ள கிராம மக்கள் சுமாா் 800 ஏக்கா் நிலங்களில் நெல் பயிரிட்டு வந்தனா். விளைந்த நெல்லை பெற இந்தப் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை அமைக்க வேண்டும் என மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. விவசாயிகளி டமிருந்து இதுவரை நேரடி கொள்முதல் நிலையத்தின் மூலம் நெல்லை வாங்காமல் இருந்ததால், சாலையோரம் கொட்டி பாதுகாத்து வந்தனா்.
தற்சமயம் கோடை மழை எந்த நேரத்திலும் வரக்கூடிய நிலை உள்ளது. மழைநீரில் நெல் நனைந்து வீணாகி, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் அச்சம் உள்ளது.
இந்த நிலையில், கருங்குழி-திருக்கழுகுன்றம் சாலை, அரையப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில், விளைந்த நெல்லை தமது வாகனங்களில் கொண்டு வந்து, சாலையில் கொட்டி, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம பொது மக்கள் ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மதுராந்தகம் வட்டாட்சியா் சு.நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினா், சாலை மறியல் செய்தவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தியதின் பேரில், அவா்கள் கலைந்து சென்றனா்.