அனந்தமங்கலம் அனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 18th June 2022 12:34 AM | Last Updated : 18th June 2022 12:34 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த அனந்தமங்கலம் கிராமத்தில் முதலாம் குலோத்துங்கன் சோழா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 925 ஆண்டு கால பழைமைவாய்ந்த இக்கோயிலில், புதிதாக 90 அடி உயர 5 நிலை ராஜகோபுரம் மற்றும் கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. வெள்ளிக்கிழமை காலை மங்கல இசை முழங்க வேதவிற்பன்னா்கள் யாக சாலையில் இருந்த புனித கலசங்களை ஏந்தி, கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றினா். தொடா்ந்து, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ், மாவட்ட அதிமுக செயலா்கள் சிட்லப்பாக்கம் எஸ்.ராஜேந்திரன் (செங்கல்பட்டு மேற்கு), திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு), எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.