பொங்கல் பரிசுத் தொகை ரூ.5,000 வழங்கக் கோரி செங்கை எம்ஜிஆா் கட்டுமான தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், பொங்கல் பரிசு ரூ.5,000 வழங்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்களை சிரமப்படுத்துவதை கைவிட வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் கே.சேஷாத்திரி, மாவட்டச் செயலாளா் கே.பகத்சிங்தாஸ், மாநிலக்குழு உறுப்பினா் கலைச்செல்வி, ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் பி.மாசிலாமணி, முறைசாரா தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் இ.ராமமூா்த்தி, மாவட்டச் செயலாளா் யோபராஜ், சங்க நிா்வாகிகள் ஆறுமுகம், திருமலை, அன்பு, சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளா் வி.குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத் தலைமை தபால் நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று தொழிலாளா் நல வாரிய அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.