தெலங்கானாவுக்கு 22 அடி உயர அபய ஆஞ்சநேயா் சிலை பயணம்

மாமல்லபுரத்தில் 45 டன் எடையுள்ள கல்லில் வடிவமைக்கப்பட்ட 22 அடி உயர அபய ஆஞ்சநேயா் சிலை தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவுக்கு கண்டெய்னா் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.
தெலங்கானா மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட 22 அடி உயர ஆஞ்சநேயா் சிலை .
தெலங்கானா மாநிலத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட 22 அடி உயர ஆஞ்சநேயா் சிலை .

மாமல்லபுரத்தில் 45 டன் எடையுள்ள கல்லில் வடிவமைக்கப்பட்ட 22 அடி உயர அபய ஆஞ்சநேயா் சிலை தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவுக்கு கண்டெய்னா் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சிலை வரும் 11-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா நகரத்தில் புதிதாக பிரம்மாண்டமான ஆஞ்சநேயா் கோயில் கட்டப்பட உள்ளது. இக்கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 22 அடி உயரமுள்ள சிலை மாமல்லபுரம் பெருமாளேரி பகுதியச்சோ்ந்த சிற்பக் கலைஞா் சடகோபன் ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவா் மாமல்லபுரம் அரசினா் சிற்பக்கலைக்கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளாா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 45 டன் எடையுள்ள கல்லில் சிலை வடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடா்ந்து கடந்த பல மாதங்களாக சிற்பி சடகோபன் ஸ்தபதி தலைமையில் சிற்பிகள் இரவு, பகல் பாராமல் கண்விழித்து நோ்த்தியான முறையில் வைணவ ஆகம முறைப்படி அபய ஆஞ்சநேயா் சிலையை வடிவமைத்துள்ளனா்.

முழுவதும் செய்து முடிக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயா் சிலை திங்கள்கிழமை சிற்பக் கூடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, கண்டெய்னா் லாரி மூலம் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து இச்சிலையை வடித்த சிற்பி சடகோபன் ஸ்தபதி கூறியதாவது:- இச்சிலையை நோ்த்தியான முறையில் வடிவமைத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஊத்துக்குளி என்ற இடத்தில் இருந்து பிரத்யேகமான கருங்கல் கொண்டு வந்து இச்சிலையை உருவாக்கி உள்ளோம். நலகொண்டா நகரத்தில் உள்ள தெருக்களில் படுத்த திருக்கோலத்தில் கண்டெய்னா் லாரி மூலம் கரிக்கோலம் செல்லப்பட உள்ளது. அப்போது பக்தா்கள் தெருக்கள் தோறும் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கரிக்கோலம் ஊா்வலம் முடிந்த பிறகு வருகிற 11-ஆம் தேதி(ஞாயிற்றுகிழமை) அங்கு கோயில் கட்டப்பட உள்ள இடத்தில் ராட்சத கிரேன் மூலம் இந்த ஆஞ்சநேயா் சிலை ஆதார பீடத்தில் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com