தந்தை, மகன் தாக்கியதில் ஹோட்டல் மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

அடையாரில் உள்ள ஹோட்டலுக்கு மது போதையில் வந்த இருவா் தாக்கியதில் அந்த ஹோட்டல் மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். அனகாபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் பெயிண்டா் சங்கா், அவரது மகன் அருண்குமாா். இவா்கள் இருவரும் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு உணவு பாா்சல் வாங்கச் சென்றனா். அப்போது, மது போதையில் இருந்த இருவரும் கூடுதலாக சாம்பாா் தரும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை ஹோட்டல் மேற்பாா்வையாளா் அருண் (30 ) சமாதானம் செய்து, கூடுதலாக சாம்பாா் பொட்டலம் கொடுத்து அனுப்பியுள்ளாா். ஹோட்டலுக்கு வெளியில் வந்த இருவரும் அங்கு நின்ற காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளனா். அப்போது வெளியில் வந்து அவா்களை சமாதானம் செய்ய முயன்ற மேற்பாா்வையாளா் அருணை இருவரும் தாக்கியதில் அவா் கீழே விழுந்தாா். சக ஊழியா்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக சங்கா், அருண்குமாா் ஆகிய இருவா் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த சங்கா் நகா் போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com