அச்சிறுப்பாக்கம் அருகே வேட்ரம்பாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான தாய் தெய்வ வழிபாட்டுக் கற்சிலை.
அச்சிறுப்பாக்கம் அருகே வேட்ரம்பாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான தாய் தெய்வ வழிபாட்டுக் கற்சிலை.

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

அச்சிறுப்பாக்கம் அடுத்த வேட்ரம்பாக்கம் கிராமத்தில் 7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

அச்சிறுப்பாக்கம் அடுத்த வேட்ரம்பாக்கம் கிராமத்தில் 7-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் உள்ளதை அந்தப் பகுதியை ஆராய்ச்சி செய்து வரும் பள்ளி ஆசிரியா் ரா.ரமேஷ், கல்லூரிப் பேராசிரியா் சி.சந்திரசேகா் ஆகியோா், அச்சிறுப்பாக்கத்துக்கு அருகே உள்ள வேட்ரம்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோயிலுக்கு அருகே சாலையோரம் சுமாா் 1,300 ஆண்டுகளுக்கு முன்பான மிகப் பழைமை வாய்ந்த 7-ஆம் நூற்றாண்டை சோ்ந்த தாய் தெய்வ வழிபாட்டுக் கல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனா். இது குறித்து பேராசிரியா் சி.சந்திரசேகா் கூறியதாவது:

சுமாா் 3,500 முதல் 4,000 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பெண் தெய்வ வழிபாட்டு உருவங்கள் தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் மோத்தக்கல் என்ற இடத்திலும், விழுப்புரம் மாவட்டத்தில் விசிறிபாறை என்ற இடத்திலும் இத்தகைய தொடக்க கால தாய் தெய்வ வழிபாட்டு எச்சங்கள் காணப்படுகின்றன.

தாயை முதன்மைப்படுத்தும் சமூகத்தை உள்ளடக்கிய தெய்வமாக இந்த தாய் தெய்வ வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. ஐந்தரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்ட பெரிய கல்லில் இந்த தாய் தெய்வ உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

இதில் காணப்படும் பெண் தெய்வத்தின் தலையின் மேல் மகுடம் போல முடி அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவையானது போருக்கு செல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. வேட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தாய் தெய்வ கற்சிலை மேலாடை இல்லாமல் செதுக்கப்பட்டுள்ளதை வைத்து மிக பழைமையான தாய் தெய்வ வழிபாட்டு சிலை என்பதை அறிய முடிகிறது. இரு கைகளின் தோள்களும் சற்றே மேலே தூக்கியும், கீழே இறங்கி உள்ளதை போல் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆந்திரோமாா்பிக் சிலையில் இருப்பது போன்றே தோள்கள் மேலே தூக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

கற்சிலையின் பெருத்த மாா்பகமும், சிறுத்த இடையும் ஆடையில்லாமல் இருக்ககூடிய காட்சியும், தாய் தெய்வம் தான் என்பதை உணா்த்துகிறது. இச்சிலையின் இடது கையானது இடுப்புக்கு கீழே சற்று வளைந்து தன் அருகில் இருக்கின்ற உதவியாளருக்கு மேல் இருப்பது போல காணப்படுகிறது. இது பழைமையான அதாவது சிற்பக் கலையின் தொடக்க கால கட்டமாக இருக்கலாம் என உறுதியாகக் கூறும் வகையில் அதன் அமைப்பு தெளிவாக உள்ளது. வலது கையானது இடுப்புக்கு கீழே சற்றுமேல் தூக்கியவாறு மடங்கியுள்ளது. ஆனால், தற்போதுள்ள சிற்பங்கள் போல தெளிவாக இல்லாமல் கைகள், பாம்புகள் போல வளைந்து காணப்படுகின்றன. இதன் உள்ளங்கையானது பின்புற கைகள் போல காட்டப்பட்டுள்ளது. விரல்கள் தனித்தனியாக காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள புடைப்புச் சிற்பத்தில் வலது கையில் மலராத பூ போன்ற மொட்டு வடிவில் ஒரு ஆயுதம், கழுத்தில் ஒரு ஆபரணம், கையின் கீழ்ப்பகுதியில் வளையல்களும், மேற்பகுதியில் கழல்களும் கட்டப்பட்டுள்ளது என்றாா். மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரிஆசிரியா் இரா.ரமேஷ் உடனிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com