கிரசென்ட் பல்கலை.யில்
கல்லூரிக் கனவுத் திட்ட விழா

கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், காட்டாங்கொளத்தூா், புனித தோமையாா் மலை ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் இருந்து 35 பள்ளிகளைச் சோ்ந்த 1,300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ் , தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோா் கலந்து கொண்டு ‘சாதிக்கலாம் வாங்க’ என்ற தலைப்பில் மாணவா்களின் உயா்கல்விக்கான சிறப்புரை வழங்கினா்.

பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு மேற்கொண்டு என்ன படிக்கலாம், எந்தப் பாடப்பிரிவைத் தோ்ந்தெடுத்துப் படிக்கலாம் என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் அடங்கிய, மேற்படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைக் கையேட்டை மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ் வழங்கினாா்.

மேலும், பிளஸ் 2, 10-ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவா்கள் 26 பேருக்கு உயா்கல்வி பயில்வதற்கான ஊக்கத் தொகையாக தலா ரூ.50,000-க்கான வங்கிக் காசோலைகளையும் மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்குப் பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிரசென்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தா் முருகேசன், பதிவாளா் என்.ராஜா ஹூசேன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.கற்பகம், ‘நான் முதல்வன்’ திட்ட திறன் பயிற்சியாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com