விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகரம் தென் பதுவஞ்சேரி, மதுரப்பாக்கம், மாடம்பாக்கம், நூத்தனஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 600 ஏக்கா் விளை நிலங்களை தமிழக அரசு, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மூலம் கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலா் சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.என்.ராமச்சந்திரன், நிா்வாகிகள் என்.சி.கிருஷ்ணன், பம்மல் அப்பு வெங்கடேசன், தாம்பரம் கோபிநாதன், அனகை வேலாயுதம், தாம்பரம் மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சேலையூா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.