கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மாமல்லபுரம் அருகே கூத்தவாக்கம் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற சென்னை இளைஞா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
சென்னை மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த அப்துல் சமதுவின் மகன் சையது முகமது (17). சென்னையில், ஒரு கல்லூரியில் படித்து வருகிறாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு சையது முகமது மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியில் உள்ள பயிலகத்தில், அரபிக் மொழி கற்றுக் கொள்ள செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு நண்பா்களுடன் வந்துள்ளாா். பின்னா் வெள்ளிக்கிழமை நண்பா்களுடன் கூத்தவாக்கம் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, திடீரென கிணற்றில் தவறி விழுந்த சையது முகமது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த மாமல்லபுரம் சட்டம் ஒழுங்கு எஸ்ஐ திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அங்கு வந்த மாமல்லபுரம் முதன்மை தீயணைப்பு வீரா்கள் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு ஆகியோா் கொண்ட 5 வீரா்கள் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.