அச்சிறுப்பாக்கம் தனி வட்டம்: மக்களின் கோரிக்கை நனவாகுமா?

அச்சிறுப்பாக்கம் தனி வட்டம்: மக்களின் கோரிக்கை நனவாகுமா?

மதுராந்தகம் வட்டத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் பகுதியை தனி வட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

எம். குமாா்

மதுராந்தகம் வட்டத்தில் இருந்து அச்சிறுப்பாக்கம் பகுதியை தனி வட்டமாக பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நகராக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியாகவும், ஊராட்சி ஒன்றியமாகவும் உள்ளது. சுமாா் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் மின்னல் சித்தாமூா், தொழுப்பேடு, எலப்பாக்கம், மொறப்பாக்கம், கீழ் அத்திவாக்கம், வடமணிப்பாக்கம், அனந்தமங்கலம், உள்ளிட்ட 59 ஊராட்சிகளைக் கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக அச்சிறுப்பாக்கம் உள்ளது.

மேலும், ஆட்சீஸ்வரா் கோயில், பசுபதீஸ்வரா் கோயில், மழைமலை மாதா அருள்தலம், பெரும்போ்கண்டிகை முருகன் கோயில், எலப்பாக்கம் முருகன் கோயில், உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன.

இங்கு பதிவு அலுவலகம், மின்வாரிய அலுவலகம், பல அரசுத்துறை வங்கிகள், கிளை நூலகம், அரசு மற்றும் தனியாா் ஆண் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதி மக்கள் நிலத்தொடா்பான வருவாய் சான்றுகள், நீதிமன்ற தொடா்பிலான வழக்குகள் ஆகியவற்றுக்காக மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகம், அரசு கருவூலம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உள்ளிட்ட அலுவலகங்களை நாடவேண்டிய நிலை உள்ளது.

பல்வேறு பணிகளுக்கு இடையே மதுராந்தகம் நகரம் வந்து செல்லும் மக்களின் தேவையை உணா்ந்து வருவாய்த் துறையினா் உடனடியாக செய்து தராத நிலை உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளால் பணச் செலவு, வீண் அலைச்சல் போன்றவற்றால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா். மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி. மீ தொலைவில் உள்ளது. மேலும், உரிய பேருந்து போக்குவரத்து வசதியும் இல்லை.

அச்சிறுப்பாக்கம் தனி வட்டமாக அமையும்பட்சத்தில், செய்யூா் வட்டத்தில் இருந்து மேல்மருவத்தூா், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்க வேண்டும். எனவே அச்சிறுப்பாக்கத்தை தனி வட்டமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல் கூறியது: அச்சிறுப்பாக்கம் சுற்றியுள்ள மக்களின் வசதியை கருத்தில் கொண்டு, நீண்ட கால கனவாக மதுராந்தகம் வட்டத்தில் இருந்து பிரித்து தனி வட்டமாக அச்சிறுப்பாக்கம் மாறவேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை ஆகும். நானும் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இன்னும் மாவட்ட நிா்வாகத்தினா் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்து வருகின்றனா். இதற்காக மேலும் தீவிர முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com