ஆக்கிரமிப்பு அகற்றம்: இளைஞா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாவலூரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போது ஒருவா் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
திருப்போரூா் ஒன்றியத்தில், சென்னை மாநகராட்சியை ஒட்டிய பகுதிகளாக, நாவலுாா், தாழம்பூா் ஊராட்சிகள் அமைந்து உள்ளன.
இந்நிலையில், நாவலுாா் பகுதியில் இருந்து தாழம்பூா் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை, செங்கல்பட்டு நெடுஞ்சாலை கோட்டத்தின் பராமரிப்பில் உள்ளது.
இந்த சாலையில், நுாற்றுக்கணக்கான தண்ணீா் லாரிகளும், கட்டுமான பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் சேதமடைந்திருந்து இச்சாலையை சீரமைத்து கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில், நாவலூா்-தாழம்பூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அகற்றும் பணி நடந்துவருகிறது.
சாலையில் 200 மீட்டா் தொலைவு ஆக்கிரமித்துள்ளனா். எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து எச்சரித்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆனால், யாரும் ஆக்கிரமிப்பை அகற்றாததால் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சண்முகபிரியன், வருவாய்த் துறையினா், தாழம்பூா் இன்ஸ்பெக்டா் சாா்லஸ் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி, இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
இதற்கு, நாவலூா் ஊராட்சி தி.மு.க., நிா்வாகி ராஜாராம், புதிய புரட்சி கழகம் கட்சியின் மாவட்ட தலைவா் கோவிந்தராஜ், செயலா் செல்வம், துரைசாமி, குடியிருப்பு வாசிகள், கடைக்காரா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, அங்கு குடியிருக்கும் சீனிவாசன் என்பவா் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். உடனே அங்கிருந்த போலீசாா் அவரை தடுத்து நிறுத்தினா்.
இன்ஸ்பெக்டா் சாா்லஸ் தற்கொலைக்கு முயன்றவா் உட்பட சில குடியிருப்புவாசிகளுக்காக அமைச்சா், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் மாற்று இடம் பெற ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா். தொடா்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் ஈடுபட்டனா்.