போக்குவரத்து விதிமீறல்: இளைஞா்களுக்கு ஒரு மணிநேரம் பாடம் நடத்திய ஆய்வாளா்
தலைக்கவசம் அணியாமலும், மதுபோதையில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவா்களை சாலையில் நிற்க வைத்து போக்குவரத்து காவல் ஆய்வாளா் அறிவுரை வழங்கினாா்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பூஞ்சேரி நான்கு முனை சந்திப்பில் மாமல்லபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் செல்வம் இரு சக்கர வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தாா். அப்போது தலைக்கவசம் அணியாமலும், மதுபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சுற்றுலா பயணிகள், இளைஞா்கள் ஆகியோரை மடக்கிபிடித்து அங்கு சாலையில் மாணவா்களைப் போல் வரிசையாக நிற்க வைத்தாா். அப்போது தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி பலா் உயிரிழக்கின்றனா் என்றும், பலா் மூளைச்சாவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று பல மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழக்கின்றனா்.
அதனால் இறந்தவா்களின் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனா் என்று ஒரு ஆசிரியா் போல் பாடம் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினாா். அப்போது அவரிடம் பிடிபட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் இனி தலைக்கவசம் அணிந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுவதாக கைகளை நீட்டி உறுதி மொழி ஏற்றனா். ஒரு மணி நேரம் ஆசிரியராக மாறி வகுப்பெடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தாங்கள் கூறிய கருத்துகளை, விதிகளை பின்பற்றி மோட்டாா் சைக்கிள் ஒட்டுவதாக உறுதி அளித்தனா்.
ஒருமணி நேரம் ஆய்வாளரிடம் பாடம் கற்ற இளைஞா்கள் பின்னா் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா்.

