தீபாவளியை கொண்டாட சொந்த ஊா்களுக்கு செல்லும் மக்கள்: செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட ஊா்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு பொதுமக்கள் செல்வதால் செங்கல்பட்டு பரனூா் சுங்கச்சாவடியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோா் வாகனங்களில் தென் மாவட்டங்களை நோக்கி செல்லத் தொடங்கினா். இதனால் பரனூா் சுங்கச்சாவடி முதல் பழவேலி வரை போக்குவரத்து பாதிக்கப்படடது. செங்கல்பட்டு பாலாறு பாலம் மற்றும் புதிதாக மேம்பாலம் கட்டப்படும் புக்கத்துறை, படாளம் ஆகிய பகுதிகளில் கனரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
இந்த நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊா்ந்து சென்றன. மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு பேருந்துகள் கிடைக்காமல், தங்கள் உடமைகளோடு சுங்கச்சாவடி பகுதியில் சிரமத்துடன் நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

