பிரதமா் கௌரவ நிதி திட்டத்தில் அடையாள பதிவை மேற்கொள்ள அறிவுறுத்தல்

பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில், 27,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது இடுபொருள்களின் செலவுக்காக வருடந்தோறும் ரூ. 6,000 பெற்று வருகின்றனா்.
Published on

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில், 27,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது இடுபொருள்களின் செலவுக்காக வருடந்தோறும் ரூ. 6,000 பெற்று வருகின்றனா்.

இந்தத் தொகையினை பெறுவதற்கு பல்வேறு காரணிகளை பூா்த்தி செய்வது அத்தியாவசியமாகிறது. நிலவுடைமை அடையாள எண்ணை பெறுவது இப்பலனை பெறுவதற்கான முக்கியக் காரணியாக உள்ளது. 20-ஆவது தவணை பெற்ற விவசாயிகளில் 8,396 போ் இதுவரை அடையாள எண் பதிவினை மேற்கொள்ளவில்லை எனத் தெரிய வருகிறது.

மேற்படி அடையாள எண்ணை பெற தங்கள் வட்டார வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிக கள பணியாளா்களுக்கு இப்பணியை மேற்கொள்வதற்கான செயலி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவா்களை அணுகியோ அல்லது வெளியூரில் வசிக்கும் விவசாயிகள் எந்தவொரு பொது சேவை மையத்தையோ அணுகி கடவு எண் மூலமாக எளிதாக பதிவு செய்யலாம்.

விவசாயி ஆதாா் எண்ணை செயலியில் பதிவு செய்தவுடன்அந்த கிராமத்தில் உள்ள தங்களது தனி மற்றும் கூட்டுப் பட்டாவில் உள்ள அனைத்து புல எண்கள்மற்றும் உட்பிரிவுகள் உரிய பரப்பளவுடன் செயலியில் காண்பிக்கும். இதனை விவசாயி ஓடிபி யின் மூலம் உறுதி செய்த பின் பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண்ணை பெறலாம்.

விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் 21-ஆவது தவணையை விடுபடாமல் பெற நிலவுடைமை அடையாள எண் பதிவை உடனடியாக தங்கள் வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு ஆட்சியா் தி.சினேகா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com