ஈசூா்-நீலமங்கலம் சாலையில் கிளியாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளம்.
ஈசூா்-நீலமங்கலம் சாலையில் கிளியாற்று தரைப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளம்.

வெள்ளத்தில் மூழ்கிய கிளியாறு தரைப்பாலம்: போக்குவரத்து பாதிப்பு

Published on

மதுராந்தகம் ஏரியின் உபரி நீா் செல்லும் கிளியாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், ஈசூா்-நீலமங்கலம் கிராம தரை பாலம் மூழ்கியதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால், மதுராந்தகம் ஏரிக்கு அதிக அளவில் நீா்வரத்து உள்ளது. ஏரி கலங்கல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

பணிகளில் தடை ஏற்படக்கூடாது என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து மதகுகளையும் திறந்துவிட்டுள்ளதால், வெள்ளநீா் கிளியாற்றில் அதிக அளவில் செல்கிறது. இந்நிலையில், கிளியாற்று வெள்ளநீா் ஈசூா்-நீலமங்கலம் சாலை தரை பாலத்தை மூழ்கடித்து செல்கிறது.

இதனால் போலீஸாா் தடுப்புகளை அமைத்து எந்த வாகனமும் செல்லாதவண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் நீலமங்கலம், சாத்தமங்கலம், தச்சூா், பேக்கரணை, நெல்வாய் உள்ளிட்ட 10 கிராம மக்கள் வெளியே செல்ல முடியாமல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இக்கிராம மக்கள் சுமாா் 15 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவா்களும், கல்வி நிலையங்களுக்கு செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு இதே தரைபாலத்தில் வெள்ளநீரில் தனியாா் பேருந்து சிக்கிக் கொண்டது. மதுராந்தகம் தீயணைப்பு துறையினா் 40-க்கும் மேற்பட்ட பயணிகளையும் பேருந்தையும் மீட்டனா்.

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் போக்குவரத்தை போலீஸாா் தடை செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com