டி.வி. சீரியல்களால் விவாகரத்து அதிகரிப்பு
Published on : 20th September 2012 11:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை, ஜூலை 11: டி.வி. சீரியல்களால் தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளதாக மாநில சமூக நலத் துறை ஆணையர் என்.பி.நிர்மலா தெரிவித்தார்.
குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு சமூக நலத் துறை சார்பில் சென்னையில் பயிலரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் அவர் பேசியதாவது: தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பப்படும் தொடர்களில், சிறியப் பிரச்னைகள் ஊதிப் பெரிதாக காட்டப்படுகின்றன. இதன் காரணமாக, சிறியப் பிரச்னைகளும் பெரிதாக்கப்பட்டு, தற்போது விவாகரத்து கோரப்படுகிறது.
மொத்தம் 2,376 வழக்குகள்: குடும்ப வன்முறைச் சட்டம் 28.10.06-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 2,376 வழக்குகள் சமூக நலத் துறையின் விசாரணைக்கு வந்துள்ளன. இதில் 139 வழக்குகளில் இருதரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 920 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா: குடும்ப வன்முறை சட்டம் நமது சமூகத்துக்கு மிகவும் தேவையான சட்டம். நமது நாட்டில் திருமணமான பெண்கள் 40 சதவீதம் பேர் கணவர்களால் துன்புறுத்தப்படுகின்றனர்.
மனைவி, தாய், சகோதரி அனைவரும் குடும்பப் பிரச்னைகளால் வன்முறைக்கு ஆளாகின்றனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, தண்டனை முக்கியமல்ல. நிவாரணம்தான் முக்கியம்.
பெண்கள் இதைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்றார் நீதிபதி கே.என்.பாஷா.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் சல்மா, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.