Enable Javscript for better performance
பரங்கிமலை சர்ச் வளாகத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    பரங்கிமலை சர்ச் வளாகத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றம்

    Published on : 20th September 2012 05:26 PM  |   அ+அ அ-   |    |  

    சென்னை, செப். 8:  சென்னை பரங்கிமலை தேவாலய வளாகத்தில் கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

      சென்னையைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு. பி.இ. படித்த இவர், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பினார். மனநல பாதிப்பு காரணமாக சிகிச்சையும் எடுத்துள்ளார்.

      இந்த நிலையில், 26.11.06-ம் தேதி பரங்கிமலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றுள்ளார். வித்தியாசமான தோற்றத்துடன் சென்ற ரமேஷ் பாபு, தேவாலயத்தில் புத்தக விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த ஜேக்கப் ஃபெர்னான்டோவிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

      பரங்கிமலையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜேக்கப் ஃபெர்னான்டோவிடம் ரமேஷ் பாபு சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

      பின்னர், தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜேக்கப்பை குத்த முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த ஜேக்கப் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அவரை துரத்திச் சென்று தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரமேஷ் பாபு குத்தியுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஜேக்கப் அங்கு உயிரிழந்தார்.

      ரமேஷ் பாபுவை கைது செய்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு விரைவு நீதிமன்றம், ரமேஷ் பாபுவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ரமேஷ் பாபு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது மனுவில், ""சம்பவம் நடைபெற்ற போது ரமேஷ் பாபு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது செயல்களை சரியான மனநிலையில் உள்ள ஒருவரின் செயலாகக் கருதக் கூடாது. அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கோரப்பட்டது.

      இந்த மனு நீதிபதி சி. நாகப்பன், நீதிபதி எம். ஜெயபால் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

      மனுதாரர் குற்றம் புரிந்தபோது மனநிலை சரியில்லாதவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மனநல பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்த பிறகு பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வேலைபார்த்துள்ளார். இந்தியா திரும்பிய பிறகும், அவர் தொடர் சிகிச்சை எதையும் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்பவம் நடந்தபோது அவர் நல்ல மனநிலையில் இருந்தார் என்றே கருத வேண்டியுள்ளது. மதவெறி காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது. ரமேஷ் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதி செய்வதாகக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    kattana sevai