சென்னை, ஜன. 1: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 34-வது சென்னை புத்தகக் காட்சி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) தொடங்குகிறது.
ஜனவரி 17 வரை 14 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் "தினமணி' அரங்கு உள்பட 646 அரங்குகளும் இடம் பெறுகின்றன.
இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை34-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்குகிறது.
கண்காட்சியை நீதிபதி அரு. லட்சுமணன் தொடங்கி வைக்கிறார். கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகளை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் வழங்குகிறார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் வாழ்த்துரை வழங்குகிறார்.
ஐனவரி 17-ம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் 646 அரங்குகள் இடம்பெறுகின்றன. வேலை நாள்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையிலும் கண்காட்சி அரங்குகள் திறந்திருக்கும். தினமும் மாலை 4 முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வழக்கம்போல புத்தகக் காட்சியில் விற்கப்படும் அனைத்து நூல்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மொத்த அரங்குகளில் 70 சதவீதம் தமிழ் புத்தக அரங்குகளும், மீதமுள்ள அரங்குகளில் ஆங்கிலம், ஹிந்தி மாணவர்களுக்கான கல்வி குறுந்தகடு அரங்குகள் என பலதரப்பட்ட அரங்குகள் இருக்கும். மலேசிய நாட்டு புத்தக பதிப்பாளர்கள் அரங்கு ஒன்றும் அமைகிறது. அதேபோல் தினமும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஜனவரி 7-ம் தேதி காலை 10 மணிக்கு புரசைவாக்கம் அழகப்பா மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரி மணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஜனவரி 10-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராணி மேரி கல்லூரியிலும் நடைபெறும்.
ஜனவரி 8-ம் தேதி காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை புத்தகக் காட்சி வளாகத்தில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெறும்.
நுழைவுக் கட்டணம் ரூ. 5: கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்கள் புத்தகக் காட்சியை இலவசமாக பார்வையிடுவதற்கு வசதியாக சென்னை மாநகர், புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இலவச நுழைவுக் கூப்பன் அனுப்பப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த கூப்பன் மூலம் தங்களது பெற்றோரை அழைத்து வந்தால் அவர்களும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.
வாசகர்களின் வசதிக்காக 5 நுழைவாயில்கள், 10 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதி, வாகனக் காப்பகம், கழிப்பிட வசதி ஆகியன சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடந்த புத்தக் காட்சியில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகின. சுமார் 7 லட்சம் வாசகர்கள் காட்சியைப் பார்வையிட்டனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு 20 முதல் 25 சதவீதம் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். புத்தகக் காட்சி குறித்த விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ங்ய்ய்ஹண்க்ஷர்ர்ந்ச்ஹண்ழ்.ஸ்ரீர்ம் என்ற இணைய தளத்தில் காணலாம் என்றார் சேது சொக்கலிங்கம்.
பேட்டியின்போது, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ராமலட்சுமணன், ஆர்.எஸ். சண்முகம், இணைச் செயலாளர் எஸ். சண்முகம் உள்ளிடோர் உடனிருந்தனர்.