டாஸ்மாக் ஊழியரிடம் லஞ்சம்: துணை ஆட்சியர் உள்ளிட்ட இருவர் கைது
சென்னை, ஜன. 1: டாஸ்மாக் ஊழியரிடம் லஞ்சம் பெற்ற துணை ஆட்சியர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸôர் கைது செய்தனர். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் விற்பனையாளர் முனுசாமியிடம் துணை ஆட்சியர் ராமலிங்கம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முனுசாமி லஞ்சம் கொடுக்க மறுத்தாரம்.
இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கம், புளியந்தோப்பு பகுதி டாஸ்மாக் கண்காணிப்பாளர் கண்ணன் மூலம் கடந்த டிசம்பர் 29-ம் தேதி முனுசாமி கூடுதல் விலையில் மது விற்பனை செய்வதாக புகார் வாங்கினாராம்.
இதைத் தொடந்து டிசம்பர் 30-ம் தேதி துணை ஆட்சியர் ராமலிங்கத்தை, விற்பனையாளர் முனுசாமி நேரில் சந்தித்து பேசினாராம். மாதந்தோறும் தான் கூறியபடி லஞ்சம் கொடுக்க மறுத்தால் இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முனுசாமியை மிரட்டினாராம்.
இது குறித்து முனுசாமி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. பொன்னுசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அசோகன், உச்சப்பட்டி பரமசாமி, இமானுவேல் ஞானசேகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீஸôர் கூறியபடி முனுசாமி, வட சென்னையில் ஒரு பகுதியில் ரூ. 5 ஆயிரத்தை கண்காணிப்பாளர் கண்ணனிடம் வெள்ளிக்கிழமை இரவு ஒப்படைத்துள்ளார். அதைத் தொடர்ந்து கண்ணனை போலீஸôர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்தப் பணத்தை கண்ணன், துணை ஆட்சியர் ராமலிங்கத்திடம் அண்ணாசாலை பகுதியில் ஒப்படைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸôர் கண்ணனையும், துணை ஆட்சியர் ராமலிங்கத்தையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.