சென்னை, ஜன. 22: சர்க்கரை நோயினால் ஏற்படும் காயங்களுக்கான நவீன தொழில்நுட்ப சிகிச்சை குறித்த ஒப்பந்தம் சென்னையில் சனிக்கிழமை கையெழுத்தானது.
எம்.வி. சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவமனை, பேராசிரியர் எம்.விஸ்வநாதன் சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையமும், பிரிட்டனின் செüத்தாம்டன் பல்கலைக்கழகத்தின் காயம் ஆற்றும் குழுமமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஒப்பந்தம் குறித்து எம்.வி.சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறியது:
சர்க்கரை நோயாளிகள் தங்கள் நோயைக் காட்டிலும், அதனால் ஏற்படும் காயங்களுக்கு 5 மடங்கு அதிகம் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏராளமான நோயாளிகள் சிக்கலான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
சில சமயங்களில் அந்த காயங்கள் முற்றிவிட்டால், அதனை வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை வெட்டி நீக்குவதற்கான செலவு சாதாரண நோயாளிகளைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகளுக்கு 5 மடங்கு அதிகரிக்கும்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை செய்வது, ஆராய்ச்சி உள்ளிட்ட பயன்களைப் பெற முடியும்.
மேலும் கல்வி, தொழில்நுட்ப தகவல்கள் பரிமாற்றம், காயங்களை குணமாக்குதல் குறித்த பாடத்திட்டங்கள் பரிமாற்றம், கூட்டு ஆராய்ச்சி, காயங்கள் குறித்த சிகிச்சையில் ஈடுபாடு கொண்ட டாக்டர்களின் திறனை மேம்படுத்தல், கருத்தரங்குகள், மாநாடுகள், ஆராய்ச்சியில் ஈடுபடுவர்களுக்கு திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
பிரிட்டிஷ் துணைத் தூதர் மைக் நித்ராவ்ராய்னிக்ஸ் முன்னிலையில் செüத்தாம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்மணியும், எம்.வி.சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விஜய் விஸ்வநாதனும் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும்
(இடமிருந்து 2-வது) எம்.வி.சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்
டாக்டர் விஜய் விஸ்வநாதன் மற்றும் செüத்தாம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்மணி. உடன் (வலமிருந்து) டாக்டர் நாகரத்தினம், பிரிட்டிஷ் துணைத் தூதர் மைக்நித்ராவ்ராய்னிக்ஸ், டென்மார்க் பேராசிரியர் ஃபின் கோட்ரப்.