சென்னை, ஜன. 22: மடிப்பாக்கம் ஏரியைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மடிப்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் எந்தவித கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அந்தப் பகுதியை ஏற்கெனவே இருந்த நிலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரி கரு சுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் வாரியம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு வழக்கறிஞர் ராஜா கலிஃபுல்லா ஆகியோர் ஆஜராயினர்.
அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் முன்வைத்த வாதம்: மடிப்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் காரணமாக ஏரியின் நீர்ப்பிடிப்பு அளவை பாதிக்காது என்று தொழில்நுட்பக் குழு அறிக்கை அளித்துள்ளது.
இதில் மனுதாரரின் எதிர்ப்பு அடிப்படையில்லாதது. மடிப்பாக்கம் ஏரியைப் பாதுகாக்கவும், ஏரியின் நீர்வரத்துக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.