சென்னை, ஜூலை 9: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 3 நாள்களில் ரூ.256 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதத்தில் அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூ.17 ஆயிரத்தை தாண்டியது. அடுத்து வந்த நாள்களில் இதன் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஒரு பவுன் ரூ. 16,512 ஆக இருந்தது. அடுத்த நாளான வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.16,640-க்கு விற்பனையானது.
இந்த விலை வெள்ளிக்கிழமை அன்று ரூ.56 குறைந்து பவுன் ரூ.16,584-ஆக இருந்தது. இது சனிக்கிழமை பவுன் ரூ.184 உயர்ந்து ரூ.16,768-க்கு விற்பனையானது. கடந்த புதன்கிழமை விலையை ஒப்பிடும் போது இந்த விலை ரூ.256 அதிகமாகும்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை விலை: ஒரு பவுன்: ரூ.16,768.
ஒரு கிராம்: ரூ.2,096.