சென்னை, ஜூலை 14: கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வில் தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வளப் படிப்பில் (பி.எஃப்.எஸ்சி.) சேர 31 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இதே போன்று செங்குன்றம் அருகே அலமாதியில் உள்ள கல்லூரியில், உணவுப் பதனீட்டுத் தொழில்நுட்பம் (பி.டெக்.-எஃப்பிடி) படிப்பில் சேர 16 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது; இந்தப் படிப்பில் 4 காலியிடங்கள் உள்ளன.
இதே கல்லூரியில் உள்ள இளநிலை கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் (பி.டெக்.-பிபிடி) படிப்பில் சேர 16 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. இந்தப் படிப்பில் 4 காலியிடங்கள் உள்ளன.
காலியிடங்களுக்கு கலந்தாய்வு எப்போது? கால்நடை மருத்துவப் படிப்பில் (பி.வி.எஸ்சி. அண்ட் ஏஎச்) சேர 177 மாணவர்களுக்கு புதன்கிழமை அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
பி.எஃப்.எஸ்சி. உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு நடத்தப்பட்டு மொத்தம் 63 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உரிய கல்லூரியில் வரும் 25-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கட்டணம் செலுத்தாத மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்த காலியிடங்கள் கணக்கிடப்பட்டு இந்த மாத இறுதியில் மீண்டும் அழைப்பு அனுப்பப்பட்டு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மாணவர் சேர்க்கை குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.