சென்னை, ஜூலை 14: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை, வெடிகுண்டு புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் புதன்கிழமை 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய பஸ் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.
இந்த நிலையில் காவல் கட்டுப்பாடு அறைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பேசுவதாக போன் வந்ததாகவும், அதில் பேசியவர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் முழுவதும், மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் குறிப்பிட்ட நேரத்துக்கு புறப்பட்டுச் சென்றன.