சென்னை, ஜூலை 14: ஜூலை 15 முதல் 21-ஆம் தேதி வரை பொதுமக்கள் பங்கேற்கும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்படும் என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் ஆகியோர் வியாழக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
ஜூலை 15 முதல் 21-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் பங்கேற்கும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை நடத்த இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன. கடந்த ஜூன் 19-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற 4 இடதுசாரி கட்சிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சக்தி படைத்த லோக்பால் அமைப்பை உருவாக்குவது, நீதித் துறையில் ஊழலை ஒழிக்க தேசிய நீதித் துறை கமிஷனை அமைப்பது, தேர்தலில் பணபலத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் கூட்டின் மூலம் நாட்டின் சொத்துக்கள் கொள்ளை போவதைத் தடுப்பது, ஊழல் செய்தோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவது, வெளிநாட்டு வங்கிகளில் குவிந்துள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவது ஆகிய 5 கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலம் பிரசார இயக்கம் நடைபெறும்.
தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் மாநிலம் முழுவதும் ஊழலுக்கு எதிரான பிரசார இயக்கத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளன.
ஜூலை 15 முதல் 21 வரை அனைத்து வட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்களில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும். ஊழலுக்கு எதிரான இடதுசாரி கட்சிகளின் இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜூலை 19-ஆம் தேதி தீப்பந்தம் ஏந்தி போராட்டம்:
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக வரும் ஜூலை 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகே தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெறும். அதில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.