சென்னை, ஜூலை 14: சென்னை பெசன்ட் நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்த விவரம்:
அடையாறு பகுதி பொன்கோ காலனியில் சில தினங்களுக்கு முன்பு தனியாக நடந்து சென்ற பெண்ணை மிரட்டி அவரிடமிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்து சென்றது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அடையாறைச் சேர்ந்த கலியமூர்த்தி (20), சங்கர் (27) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நகைப்பறிப்பில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு உதவியாக பழைய குற்றவாளிகளான பாலகிருஷ்ணனும், அவரது மனைவி கலைச்செல்வியும் இருந்தது தெரியவந்தது. இதன்பேரில் போலீஸார் கலைச்செல்வியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.