சென்னை, ஜூலை 14: மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 21 பேர் பலியாகியுள்ளனர், 141 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி வேதனையைத் தருகிறது. இக்கொடூர சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து, பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.