சென்னை,ஜூலை 30: சென்னை வேளச்சேரியில் காரில் சென்றவரின் கவனத்தை திசை திருப்பி ரூ. 2 லட்சம் திருடப்பட்டது.
வேளச்சேரி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கந்தகுமார் (43). இவர் சனிக்கிழமை அங்குள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டுக்கு வந்தாராம். காரில் அவர், சென்றுக் கொண்டிருக்கும்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் அவரை வழிமறித்து, காரில் இருந்து பெட்ரோல் கசிவதாக தெரிவித்தாராம். அவரது பேச்சை நம்பி கந்தகுமார், காரை நிறுத்தி கீழே இறங்கி, பெட்ரோல் டேங்கை பார்க்கச் சென்றாராம். இந்நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், காரில் இருந்த ரூ. 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடினாராம். இதைப் பார்த்து கந்தகுமார் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து வேளச்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கந்தகுமார் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.