தாம்பரம், ஜூலை 30: ரூ.140 கோடி செலவில் நாடெங்கும் 20 இடங்களில் பாதுகாப்பான குடிநீர் ஆதாரங்களைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறை செயலர் டி.ராமசாமி தெரிவித்தார்.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 3 நாள்கள் நடைபெற்ற புவி உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
இந்தியாவில் நீர் வளத்துக்குப் பஞ்சம் இல்லை. அதே சமயம் பாதுகாப்பான குடிநீர் பெறும் வழிமுறையும், குடிநீர் ஆதாரங்களின் பராமரிப்புத் திறனும் குறைந்து கொண்டே இருக்கிறது என்பது கவலை அளிக்கும் விஷயம்.
பாதுகாப்பான குடிநீர் பெறுவதில் 26 வகையான குறைபாடுகளும், பிரச்னைகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 95 சதவீதப் பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம்தான் தீர்வு காண முடியும் என்றார் டி.ராமசாமி.
விழாவில் பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், தேசிய அறிவியல் துறை தலைவர் மேஜர் ஜெனரல் சிவகுமார், எல்.ஆர்.ஏ.நாராயண், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.ஷீலாராணி, பதிப்புத் துறை முதல்வர் டி.சசிபிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.