சென்னை, பிப். 11: சென்னை அருகே காவல் துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மேற்கு தாம்பரம் அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் கு. தர்மராஜ் (27). இவர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை குருசாமி, ஓய்வு பெற்ற வனச்சரகர் ஆவார்.
சென்னையில் உள்ள தர்மராஜின் வீட்டில் குருசாமி உள்ளிட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குருசாமியும், அவரது குடும்பத்தினரும் தர்மராஜுக்கு பெண் பார்க்கவும், திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காகவும் சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனராம்.
இந்நிலையில், அந்த வீட்டின் மாடியில் வசிக்கும் முகமது என்பவர், சனிக்கிழமை காலை தர்மராஜின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து சேலையூர் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில், தர்மராஜின் வீட்டில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து சேலையூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.