Enable Javscript for better performance
துரைதயாநிதி திரைப்பட நிறுவனத்தில் போலீஸார் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    துரைதயாநிதி திரைப்பட நிறுவனத்தில் போலீஸார் சோதனை

    By dn  |   Published on : 05th October 2012 01:11 AM  |   அ+அ அ-   |    |  

    duraidayanidhi

    மதுரை கிரானைட் முறைகேடு தொடர்பாக மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதிக்குச் சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவன சென்னை அலுவலகத்தில் போலீஸார் வியாழக்கிழமை சோதனை செய்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. மற்றும் ஒலிம்பஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குதாரர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வழக்கில் ஒலிம்பஸ் நிறுவனப் பங்குதாரராக இருந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

    இதனால் துரைதயாநிதியைக் கைது செய்ய மதுரை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் 10 தனிப்படைகள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தனிப்படையினர், துரைதயாநிதியின் இருப்பிடம், அவர் கிரானைட் தொழிலில் ஈட்டிய வருவாய் குறித்த விவரங்களை அறிய அழகிரியின் உறவினர்கள், துரைதயாநிதியின் நண்பர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலுவலகத்தில் சோதனை:

    இந்நிலையில், தியாகராயநகர் கிருஷ்ணா தெருவில் உள்ள துரைதயாநிதியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "கிளவ்ட் நைன் மூவிஸ்' நிறுவன அலுவலகத்தில் மதுரை போலீஸார் வியாழக்கிழமை சோதனை செய்தனர். டி.எஸ்.பி. தங்கவேல், இன்ஸ்பெக்டர் சேதுமாதவன் ஆகியோர் தலைமையில் காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நடைபெற்றது.

    இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் போலீஸார், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்களுக்கு சில முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது. போலீஸாரின் இந்த திடீர் சோதனையால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    kattana sevai