Enable Javscript for better performance
பாஜக கூட்டணியில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- Dinamani

சுடச்சுட

  

  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது.

  சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் ஆதரவுக் கடிதத்தை சதக்கத்துல்லா வழங்கினார். அப்போது காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சதக்கத்துல்லா தலைமையிலான அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவார்கள். டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய வீடுதோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை என்ற பாத யாத்திரைக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 700-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களில் இந்த யாத்திரை நிறைவு பெற்றுள்ளது.

  வீடுகள்தோறும் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது மக்களின் பிரச்னைகள், கிராமங்களின் பிரச்னைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பாத யாத்திரை வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும்.

  பிரதமர் ராஜிநாமா செய்ய வேண்டும்:

  தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றாலும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற கொடுமைகள் தொடர்கின்றன. இப்போது மீண்டும் 180-க்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  இதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்துள்ளது. இந்திய மீனவர்களை ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் வேண்டும். இல்லையெனில் அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

  மெரீனாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்

  முன்னாள் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிக உயரமான இரும்பு சிலை அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து விவசாயிகள் பயன்படுத்திய இரும்புப் பொருள்கள் பெறப்பட்டு அதன் மூலம் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இது குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக பட்டேலின் நினைவு தினமான வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) காலை 8 மணிக்கு நாடு முழுவதும் சுமார் 1,500 இடங்களில் ஒற்றுமை ஓட்டம் நடைபெறவுள்ளது.

  சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெறும் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆர். நடராஜ், பாலச்சந்தர், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, திரைப்படத் தயாரிப்பாளர் எஸ், தாணு, நடிகை ரேணுகா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருப்பதாக பட்டேல் சிலை அமைப்புக் குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai