சென்னையில் புத்தகக் காட்சி இன்று துவக்கம்
By dn | Published On : 10th January 2013 11:28 PM | Last Updated : 11th January 2013 12:52 PM | அ+அ அ- |

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் 36 ஆவது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) தொடங்குகிறது.
ஜனவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் காட்சியின் தொடக்க விழா, ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி வளாக மைதானத்தில் அமைந்துள்ள புன்னகை அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார். செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிறந்த நூல்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
இதற்கிடையே புத்தகக் காட்சி அரங்குகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பதிப்பகத்தினர், விற்பனையாளர்களிடம் அரங்குகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவற்றில் புத்தகங்களை அடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வெளி மாநில பதிப்பாளர்கள் ஏற்கெனவே வந்து சேர்ந்துவிட்டனர். உள்ளூர் பதிப்பகத்தினர், விற்பனையாளர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் தங்கள் பணிகளை முடித்துவிடுவார்கள்.
மேலும் அரங்கிற்கு வரும் வாசகர்கள், பொதுமக்களுக்காக தாற்காலிக கழிப்பிடங்கள், குடிநீர், உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள் தற்போது துரிதகதியில் நடைபெற்று வருவதாக புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் கூறினார்.
14 வரிசைகளில் அரங்குகள்: புத்தகக் காட்சியில் உள்ள 14 அரங்குகளுக்கும் கவிஞர்கள், எழுத்தாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
சக்தி வை.கோவிந்தன், கவிஞர் சுரதா, பெர்னாட்ஷா, உமறுப்புலவர், உ.வே.சா., சுவாமி விவேகானந்தர், வை.மு.கோதைநாயகி, கே.ஏ.அப்பாஸ், கவிஞர் ஷெல்லி, நா.பார்த்தசாரதி, அப்பாதுரையார், கவிமணி தேசிக விநாயகம், பெரியசாமி தூரன், நாவலாசிரியை லட்சுமி ஆகிய 14 பேர்களின் பெயர்கள் அரங்குகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.
பஸ்களில் வருபவர்களுக்கு சிரமம்: புத்தகக் காட்சி அரங்கு ஒய்.எம்.சி.ஏ. பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், பஸ்கள் மூலம் வர உள்ள வாசகர்கள், பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
ஏற்கெனவே மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் புத்தகக் காட்சி அமைந்திருப்பது ஒரு பாதகமான அம்சம்தான் என்று புத்தக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
புத்தகத் திருவிழாவில் இன்று
36 ஆவது சென்னை புத்தகக் காட்சியின் தொடக்க விழாவான வெள்ளிக்கிழமை "பபாசி' விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புன்னகை அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் எழுத்தாளர் எஸ்.லீலா, மொழி பெயர்ப்பாளர் மு.சிவலிங்கம், பதிப்பாளர் டி.எஸ்.ராமலிங்கம், விற்பனையாளர் ஜெ.சிதம்பரம்பிள்ளை, நூலகர் தி.க.திருவேங்கடமணி, சிறுவர் அறிவியல் எழுத்தாளர் காலேப் எல்.கண்ணன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகம் ஆகியோருக்கு "பபாசி' விருதுகள் வழங்கப்படுகின்றன.