Enable Javscript for better performance
மதுரையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி

    By dn  |   Published on : 23rd June 2013 03:29 AM  |   அ+அ அ-   |    |  

    மதுரை அனுப்பானடியில் கட்டப்பட்டுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

    மதுரை மத்திய பஸ் நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள அனுப்பானடியில் "வேலம்மாள் வில்லேஜ்' என்ற பெயரிலான இடத்தில், வேலம்மாள் மருத்துவமனை ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.

    அதன் அருகில் கட்டப்பட்டுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் முதல் கட்ட மற்றும் இறுதி அனுமதி இரண்டையும் சேர்த்து வழங்கியுள்ளது.

    அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள்: தமிழகத்தில் தொடங்கப்படும் 12-ஆவது சுயநிதி மருத்துவக் கல்லூரியாக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி செயல்படும்.

    இந்தப் புதிய கல்லூரி 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்படுவதால், அரசு ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்களை அது அளிக்கும்.

    இதன் மூலம் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை மொத்தம் 935-ஆக அதிகரிக்கும்.

    சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூலை 2-ஆவது வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இட கலந்தாய்வில் வேலம்மாள் கல்லூரியின் 97 எம்.பி.பி.எஸ். இடங்களும் சேர்க்கப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai