Enable Javscript for better performance
சரோஜினி வரதப்பன் மறைவு: தலைவர்கள் இரங்கல்- Dinamani

சுடச்சுட

    

    சரோஜினி வரதப்பன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

    By dn  |   Published on : 18th October 2013 02:43 AM  |   அ+அ அ-   |    |  

    sarojini

    முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மூத்த மகளும் சமூக சேவகருமான சரோஜினி வரதப்பன் (93) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

    உடல் நலக்குறைவால் கடந்த 10 நாள்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை 7.50 மணிக்கு உயிரிழந்தார். இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

    முன்னாள் முதல்வரின் மகள்: தமிழக முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலத்தின் மூத்த மகளான சரோஜினி வரதப்பன், 1921 செப்டம்பர் 21-ஆம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட அவர், அதன் பிறகு படித்து பட்டம் பெற்றார்.

    படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 60-ஆவது வயதில் எம்.ஏ. (வைணவம்) பட்டமும், 80-ஆவது வயதில் சுவாமி நாராயண் இயக்கம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

    சிறு வயது முதல் சமூக சேவையில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது தாயார் ஞானசௌந்தரம்பாளுடன் இணைந்து இந்திய பெண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பினைத் தொடங்கினார்.

    அவரது முயற்சியால் இன்று 76 கிளைகளுடன் நாடு முழுவதும் சிறப்பாக இந்த கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இசையிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பரூர் சுந்தரம் ஐயரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டவர்.

    தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர். இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர், சென்னை மாநகரின் செரீப், தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் தலைவர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளின் கௌரவ நீதிபதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர்.

    ஸ்ரீசக்தி புரஸ்கார், பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றவர்.

    முதல்வர் சார்பில் மரியாதை: சரோஜினி வரதப்பனின் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா சார்பில், சமூக நலத் துறை அமைச்சர் வளர்மதி மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். சரோஜினி வரதப்பனின் சகோதரி ருக்மணியின் மகளும், மத்திய இணை அமைச்சருமான ஜெயந்தி நடராஜன், முன்னாள் நீதிபதிகள் மோகன், நடராஜன்,

    மாநிலங்களவையின் திமுக குழு உறுப்பினர் கனிமொழி, உள்ளிட்டோர் சரோஜினி வரதப்பனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

    முதல்வர் ஜெயலலிதா இரங்கல்: இந்திய மகளிர் சங்கத்தின் தலைவராகவும், மயிலாப்பூர்அகாதெமியின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியவர் சரோஜினி வரதப்பன். 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சென்னை நகர ஷெரீப் ஆக பணியாற்றியவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளுக்குச் சொந்தக்காரர். அனைவரிடத்திலும் எளிமையாகவும், இனிமையாகவும் பழகக்கூடியவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.

    திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai