அரசு மருத்துவமனைகள் குறித்த புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் 2,580 செல்போன்கள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் மருத்துவம் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை 24 மணி நேரமும் பெறுவதற்கு 104 என்ற மருத்துவ சேவை உதவி எண் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனை சேவைகள் தொடர்பான குறைகளையும் பொதுமக்கள் இந்த உதவி மையத்துக்கு தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் 104 சேவை எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களை தெரிவித்தவுடன், எந்த மருத்துவமனை குறித்து புகார் தெரிவிக்கப்படுகிறதோ அந்த மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரு வேளை குறிப்பிட்ட மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் செல்போனை எடுக்கவில்லை அல்லது அழைப்பை ஏற்கவில்லை என்றால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
இந்த செல்போன் எண்கள் சங்கிலித் தொடர் போல இறுதியாக சுகாதாரத் துறைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரை இணைக்கும்.
அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள், மாவட்ட நல்வாழ்வுத் துறை துணை மற்றும் இணை இயக்குநர்கள், அனைத்து சுகாதாரத் துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து நபர்களுக்கும் செல்போன் இணைப்பு வழங்கப்படும்.
மருத்துவத் துறையைச் சேர்ந்த 2,580 பேருக்கு ரூ. 63 லட்சம் செலவில் செல்போன்கள் வழங்கப்படும்.
தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை தொடங்கும் விதமாக இரண்டு பேருக்கு செல்போன்களை வழங்கினார்.