Enable Javscript for better performance
கட்டட விபத்து: நான்காவது நாளில் 4 பேர் உயிருடன் மீட்பு: தோண்ட, தோண்ட சடலங்கள்; சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    கட்டட விபத்து: நான்காவது நாளில் 4 பேர் உயிருடன் மீட்பு: தோண்ட, தோண்ட சடலங்கள்; சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்வு

    By dn  |   Published on : 02nd July 2014 04:55 AM  |   அ+அ அ-   |    |  

    building

    சென்னை மௌலிவாக்கம் கட்டட இடிபாடுகளிடையே இருந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை உயிருடன் 4 பேர் மீட்கப்பட்டனர். ஒரே நாளில் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

    இது குறித்த விவரம்: சென்னை மௌலிவாக்கம் போரூர்-குன்றத்தூர் சாலையில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டடம் சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. அப்போது கட்டடத்தில் இருந்த சுமார் 72 தொழிலாளர்கள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டனர்.

    இது குறித்து தகவலறிந்ததும் சென்னை முழுவதிலும் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மீட்பு பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, 8 மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்களும், மெட்ரோ ரயில் ஊழியர்களும் மீட்பு பணியில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளிடையே சிக்கி இருப்பவர்களை கண்டறிய கண்காணிப்பு கேமரா, 20 மோப்ப நாய்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை மீட்பு பணி முழு வேகத்தில் நடைபெற்றது. பணிகளை முடுக்கிவிடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் அங்கு அதிகாரிகள் முகாமிட்டிருந்தனர்.

    ஒரே நாளில் 13 சடலங்கள் மீட்பு:

    செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே மீட்புக் குழுவினர் இடிபாடுகளிடையே இருந்து சடலங்களை அடுத்தடுத்து மீட்டனர். இதில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 7 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

    இந்த சடலங்கள் அனைத்தும் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பின்னர் பகல் வேளையில் ஒரு ஆண் சடலமும், ஒரு பெண் சடலமும் மீட்கப்பட்டன. மாலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்டன. இதேபோல மீட்பு படையினரின் தீவிர முயற்சியால் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

    மீட்கப்பட்டவர்களில் மதுரையைச் சேர்ந்த செந்தில் (40), ஆந்திரத்தைச் சேர்ந்த மகேஷ் (35), அனுசுயா என்ற பொம்மி (30) ஆகியோர் ஒரே இடத்தில் இரு தூண்களுக்கு இடையே சிக்கிக் கொண்டு உயிரோடு இருப்பதை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை கண்டறிந்தனர். இதனால் உஷாரடைந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளை சிறிது அகற்றி, அவர்களுக்கு வெளியே இருந்தபடி குளுகோஸ் வழங்கினர்.

    பின்னர் 3 பேரையும் ஒவ்வொருவராக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் சிறிது காயத்துடனும், மூச்சுத் திணறலுடன் இருந்த அவர்கள் உடனடியாக போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மீட்கப்பட்ட மகேஷ் கூறியது: சனிக்கிழமை கன மழை பெய்யும்போது 11 மாடியின் மையப் பகுதியில் நான் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் நான் உள்பட 3 பேர் இரு தூண்களுக்கு இடையே சிக்கிக் கொண்டோம்.

    நான் சிக்கிக் கொண்ட பகுதியின் அருகே இன்னும் சில தொழிலாளர்கள் உயிருடன் உள்ளார்கள் என மகேஷ் மீட்பு குழுவினரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மீட்புக் குழுவினர் முழு வேகத்தில் அந்த பகுதியில் இருந்த கட்டட இடிபாடுகளை அங்கிருந்து அகற்றினர். இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த ஜெயம்மாள் (35) என்பவர் காலை 10.30 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இதேபோல அதே பகுதியில் இருந்து நண்பகல் 1.30 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

    பின்னர் மாலை 5.30 மணியளவில் ஒடிஸாவைச் சேர்ந்த விகாஷ்குமார் என்ற யுகாஷ் (23) என்ற இளைஞர் மீட்கப்பட்டார். கட்டடம் இடிந்து விழுந்து 3 நாள்களுக்கு பின்னர் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டது, மீட்பு குழுவினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இரவு 7 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலமும், அதன் அருகே மற்றொரு ஆண் சடலமும் மீட்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை மட்டும் 13 பேர் சடலமாகவும், 4 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். நான்கு நாள்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் மொத்தம் 60 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27 பேர் உயிருடனும், 33 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.

    மீட்புக் குழுவினருக்கு தடுப்பூசி: இந்நிலையில் கட்டடம் இடிந்து விழுந்து 72 மணிநேரத்துக்கு மேலாகிவிட்டதால், இடிபாடுகளிடையே சிக்கி இருந்தவர்களின் உடல் சிதைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் மீட்புக் குழுவினரால், மீட்பு பணியில் வேகமாக ஈடுபட முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கண்கள் மட்டும் தெரியும் அளவில் முகமூடி அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டட இடிபாடுகள் மீதும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசியும் போடப்பட்டது. அதேபோல மீட்புக் குழுவினர் சோர்வடையாமல் இருப்பதற்கு குளுகோஸ் கலந்த நீரும், உப்பு மற்றும் சர்க்கரை (எலக்ட்ரால் பவுடர்) கலந்த குடிநீரும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து நான்கு நாள்களாக மீட்பு பணி நடைபெற்று வருவதால் மீட்பு குழுவினரிடம் செவ்வாய்க்கிழமை சோர்வு தெரிந்தது. இருப்பினும் உயர் அதிகாரிகளே சம்பவ இடத்தில் இருந்தப்படி பணியை முடுக்கிவிட்டதால், மீட்பு பணி தொய்வு இல்லாமல் நடைபெற்றது.

    ஆந்திரத்துக்கு 50 பேர் பயணம்: இதற்கிடையே இடிந்து விழுந்த கட்டடத்தில் வேலை செய்து விபத்தில் சிக்காமல் இருந்த 50 பேர் மௌலிவாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளியில் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    இவர்கள் அனைவரையும் ஆந்திர அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஒரு பஸ்ஸில் ஆந்திரத்துக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல அந்தப் பள்ளியில் தங்கியிருக்கும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ. 25 ஆயிரம் உடனடி நிவாரணத் தொகை வழங்குவதற்காக, ஆந்திர அரசு அதிகாரிகள் பெயர் பட்டியலை தயார் செய்தனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp